துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை; அதிர்ந்த மக்கள்!!!

பிஎஃப் வழங்காத நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்களிடம் துப்பாக்கி முனையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

துப்பாக்கி முனையில் பேச்சுவார்த்தை; அதிர்ந்த மக்கள்!!!

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் தொழில்பேட்டையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஹாரன் வயர்களை தயாரிக்கும் ஸ்பார்க் மிண்டா சாய் நிறுவனம் இயங்கி வருகிறது. 

இந்த நிறுவனத்தில் 600க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகின்றனர் இந்த நிலையில் 10 வருடங்களுக்கு மேலாக பணி செய்யும் பெண் ஊழியர்களுக்கு இதுவரை பிஎப் வழங்கப்படாமலும் மேலும் பிஎப் குறித்து கேட்கும் பெண் ஊழியர்களை அச்சுறுத்தி பணியிலிருந்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் திடீரென நிறுவனத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பெண் ஊழியர்களை நிறுவனத்திற்கு உள்ளே அழைத்து நிறுவனத்தின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் பெண் ஊழியர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் நிறுவனத்தின் அதிகாரி துப்பாக்கி ஏந்திய காவலாளியுடன் பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்தில் ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் நின்றதால் பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண் ஊழியர்களிடம் காவல்துறையினர் அமைதியான முறையில் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது நிறுவனத்தின் அதிகாரி துப்பாக்கி ஏந்திய காவலாளியுடன் வந்து நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. 

இது போன்று பெண் ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் துப்பாக்கியுடன் நின்ற காவலர் மீதும் உடன் இருந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது