ஒமைக்ரான் குறித்து பெரிதாக அச்சப்பட தேவையில்லை...அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!!

ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருந்தாலும், பெரிதாக அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ஒமைக்ரான் குறித்து பெரிதாக அச்சப்பட தேவையில்லை...அமைச்சர் மா.சுப்பிரமணியன்...!!

சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு துவக்கம் செய்யப்பட்டுள்ளது. 15 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும், 35 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவு தயார் செய்யப்பட்டுள்ளது.

இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் துவக்கி வைத்து ஆய்வு செய்தனர். .

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், கூறுகையில், கொரொனா உருமாற்றத்தின் ஒன்றான ஒமைக்ரான் 38 நாடுகளில் வேகமாக பரவி வருகிறது என்றும் ஆபத்து அதிகம் உள்ள 12 நாடுகளில் இருந்து விமானம் மூலம் வருபவர்களும், மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என கூறினார். 

இதுவரை வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த 7 பயணிகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்களை கண்காணித்து வருகிறோம். அதில் 6 பேருக்கு ஏற்கனவே டெல்டா வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு பேர் நாகர்கோவில் மருத்துவமனையிலும், 4 பேர் கிங்ஸ் மருத்துவமனையிலும், ஒருவர் வீட்டு கண்காணிப்பில் தனிமை படுத்திகொண்டு இருக்கிறார்கள் என்றார்.

ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை இருந்தாலும், பெரிதாக அச்சப்பட தேவையில்லை என கூறிய அவர், தமிழகத்தில் 80.44% முதல் தவணையும், 47.46% 2வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வழக்கம் போல் சனிக்கிழமை 14வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெறும் என கூறினார்.