ஸ்டாலின் 550 வாக்குறுதிகளை கொடுத்தார்... ஆனால் ஆளுநர் உரையில் ஒன்றுமே இல்லை... முதல்நாளிலேயே குறைகளை அடுக்கிய எதிர்க்கட்சி தலைவர்..!

மு.க.ஸ்டாலின் கொடுத்த 550 வாக்குறுதிகளில் ஒன்றுகூட ஆளுநர் உரையில் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஸ்டாலின் 550 வாக்குறுதிகளை கொடுத்தார்... ஆனால் ஆளுநர் உரையில் ஒன்றுமே இல்லை... முதல்நாளிலேயே குறைகளை அடுக்கிய எதிர்க்கட்சி தலைவர்..!
தமிழக சட்டப்பேரவையின் 16ஆவது கூட்டத் தொடர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடியது. இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார்.
கூட்டத்தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டத் தொடரில் கலந்து கொண்டனர். ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை முடிவடைந்தது.
இதனையடுத்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் தமிழக அரசின் மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
 
தேர்தல் பிரச்சாரத்தின்போது மு.க.ஸ்டாலின் 550 வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றுகூட இன்றைய ஆளுநர் உரையில் இல்லை என்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆளுநர் உரையில் அரசின் முன்னோடி திட்டங்கள் எதுவும் இல்லை.
 
திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தெரிவித்து விட்டு இன்று அதை பற்றி விசாரிக்க குழு அமைக்கபட்டிருக்கிறது.
ஆனால் தேர்தல் அறிக்கையிலும், பிரச்சாரத்தின் போது சொன்ன நீட் தேர்வு ரத்து என்று சொல்லி விட்டு குழு அமைக்கபட்டு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு பேச்சினை பேசி வருகின்றனர்.
 
திமுக ஆட்சி அமைந்து 45 நாட்கள் ஆகிறது. விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் ரத்து பத்திரம் வழங்கபடவில்லை
மாணவர்கள் வாங்கிய கல்வி கடந்த ரத்து செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர். அதுகுறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை.
 
பெட்ரோல் டீசல் விலை குறைப்பு என வாக்குறுதி கொடுத்து அறிவிப்பு வெளியிட்டனர். அந்த அறிவிப்பு குறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை.  குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்த அறிவிப்பு குறித்தும் ஆளுநர் உரையில் தகவல் இல்லை என சரமாறி குற்றச்சாட்டுகளை அடுக்கினார் எடப்பாடி பழனிசாமி.
 
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர்.