4 - வது நாளாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்...! நிரந்தர பணி வழங்கக் கோரிக்கை...!

4 - வது நாளாக தொடரும் செவிலியர்கள் போராட்டம்...! நிரந்தர பணி வழங்கக் கோரிக்கை...!

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற செவிலியர்களை பணி நீக்கம் செய்த திமுக அரசை கண்டித்தும், நிரந்தர பணி வழங்கக்கோரியும் சென்னையில் செவிலியர்கள் 4 - வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ இயக்குனரக வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் செவிலியர்களாக பணியாற்றி வந்த 3000 க்கும் அதிகமான செவிலியர்களை டிசம்பர் 31 ஆம் தேதி தமிழக சுகாதாரத்துறை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதில் பணி வாய்ப்பை இழந்த செவிலியர்கள், தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தேர்தல் அறிக்கையில், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியாற்றி வரும் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வதாக சொல்லிவிட்டு, தற்போது 3000 க்கும் அதிகமான செவிலியர்களை பணி நீக்கம் செய்துவிட்ட திமுக அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கியதாக சுகாதாரத் துறை அமைச்சர் ஒரு பொய்யான தகவலை சொல்லி வருவதாகவும், செவிலியர்கள் குற்றம் சாட்டினர்.  

தமிழக சுகாதாரத்துறை தற்போது பணி நீக்கப்பட்ட செவிலியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மாற்றுப் பணி என்பதும் ஒரு தற்காலிக பணி தான் என்றும், அடுத்த 11 மாதம் கழித்து மீண்டும் தங்களுக்கு பணி வாய்ப்பு கேட்டு போராடக்கூடிய ஒரு நிலையில் தான் அந்த பணியை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் வழங்கி இருப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

இதையும் படிக்க : உடல் எடை குறைக்க மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர்...! உயிரிழந்த சோகம்...!