நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு...ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை..!

நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு...ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை..!

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான ஓபிஎஸ் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

பொதுக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஓ.பி.எஸ்:

சென்னையில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரி மனு அளித்த ஓ.பி.எஸ்:

இந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கடந்த ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி விசாரிப்பதாக பட்டியலிட்டப்பட்ட நிலையில், வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டது. 

ஓ.பி.எஸ்ஸின் மனுவை நிராகரித்த நீதிபதி:

நீதிபதியை மாற்றுவது குறித்த ஓபிஎஸ் மனுவை நிராகரித்து தலைமை நீதிபதி முனீஸ்வர்நத் பண்டாரி உத்தரவிட்டார். அதனால் வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே விசாரித்தார். அப்போது, ஓபிஎஸ்-இன் செயல் நீதித்துறையை களங்கப்படுத்துவது போல் இருப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கருத்து தெரிவித்தார். இதையடுத்து ஓபிஎஸ் தரப்பில் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது. 

வழக்கை விட்டு விலகிய நீதிபதி:

இருப்பினும், இந்த வழக்கில் புதிய நீதிபதியை நியமிக்கும் வகையில், தலைமை நீதிபதி முன் வழக்கு விவரங்களை சமர்ப்பிக்கும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விலகினார்.

இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது ஓ.பி.எஸ் வழக்கு:

இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியின் பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்தார். இதையடுத்து நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய வழக்கில் சொல்லப்போகும் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.