அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடைக்கோரிய வழக்கு; ஓ.பி.எஸ் பதிலளிக்க அவகாசம்!

அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த தடைக்கோரிய வழக்கு; ஓ.பி.எஸ் பதிலளிக்க அவகாசம்!
Published on
Updated on
1 min read

அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு தடைக் கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி, முன்னாள் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2021 தேர்தல் தோல்வியை அடுத்து அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான கோரிக்கைகள் எழுந்தன. இதனையடுத்து அதிமுகவிற்கு மீண்டும் பொதுச்செயலாளரை தேர்வு செய்தும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்ததை அப்பதவியிலிருந்து நீக்கியும் அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ள நிலையில், கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். 

இதைதொடர்ந்து, கட்சியின் பெயரை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது,  இந்த மனு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு  வந்தது.

எடப்பாடி தரப்பில், உச்ச நீதிமன்றம் வரை நான்கு முறை வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இந்த வழக்குகளில் கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரை நீக்கியது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கட்சி சின்னம், கொடியை பயன்படுத்தி வருவதாகவும், கட்சி உறுப்பினர் என கூறி வருவதாகவும், கட்சி லெட்டர்பேடை சட்டவிரோதமாக பயன்படுத்தி,  ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் வாதிடப்பட்டது.

மனுவுக்கு பதிலளிக்க குறுகிய அவகாசம் வழங்க வேண்டும் என பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com