கைதாகிறாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்..? 2வது நாளாக அதிகாரிகள் துருவி துருவி விசாரணை...

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்காக, சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் 2வது நாளாக ஆஜரானார். 

கைதாகிறாரா எம்.ஆர்.விஜயபாஸ்கர்..? 2வது நாளாக அதிகாரிகள் துருவி துருவி விசாரணை...

அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீதம் சொத்துக்களை குவித்ததாக அவர் மீதும், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் சகோதரர் சேகர் ஆகியோர் மீதும் சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு சொந்தமான 26 இடங்களில், கடந்த ஜூலை 22ம் தேதி சோதனை நடத்தப்பட்டு, 25 லட்சம் ரூபாய் பணம் உள்பட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 

இந்நிலையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சம்மன் அனுப்பியதன் அடிப்படையில் நேற்று சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக வருமானத்துக்கு அதிகமாக  2 புள்ளி 85 கோடி ரூபாய் சொத்துக்கள், எதன் மூலம்  சேர்க்கப்பட்டது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதுதவிர  சோதனையின்போது கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள், காப்பீட்டுத்தொகை ஆவணங்கள் மற்றும் பணப் பரிவர்த்தனை தொடர்பான கோப்புகளின் அடிப்படையில் அவரிடம் துருவித் துருவி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். நேற்று சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணை முடிவடையாததை அடுத்து, இன்றும்  எம்.ஆர் விஜயபாஸ்கர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். அதன்பேரில் அவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்.  அவரிடம் மேலும் பல கேள்விகள் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மூலம் கேட்கப்படும் என தெரிகிறது.

இதற்கிடையே,  சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக  உரிய ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாகவும், முறையாக வருமான வரி செலுத்தி அனைத்து ஆவணங்களையும் சரியாக வைத்துள்ளதாகவும் , சட்ட ரீதியாக இதை சந்திக்கத் தயார் எனவும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.