கட்சி கொடியை அகற்ற கூறிய அதிகாரிகள், முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்..!

பாஜக எம்எல்ஏ வாகனத்தில் இருந்த கட்சிக் கொடியை அகற்றுமாறு மாநகராட்சி பறக்கும் படை அதிகாரி கூறியதை அடுத்து, அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கட்சி கொடியை அகற்ற கூறிய அதிகாரிகள், முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறும் நிலையில், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. அதனால், மாநிலம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் ஒரே சமயத்தில் நடைபெறும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வாகனங்களில் கட்சி கொடி கட்ட அனுமதி கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியான கேடிசி நகரில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த விடுதியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். அப்போது மாநகராட்சியின் பறக்கும் படை அதிகாரி 
 சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியின் காரில் இருந்த கொடியை அகற்றும் படி தெரிவித்துள்ளார்.

ஆனால், அகற்ற முடியாது என கூறி சட்டமன்ற உறுப்பினரோடு வந்த நபர்கள் காவல்துறை மற்றும் பறக்கும் படை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். மேலும் கேடிசி நகர் பகுதியில் நான்கு வழிச் சாலையின் நடுவே ஆயிரக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள் நடப்பட்டுள்ளது.

இதனை சுட்டிக்காட்டிய பாஜகவினர், அதனை அகற்றினால், நாங்கள் இதை அகற்றுவோம் என கூறி சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கொடியை அகற்றாமல் அங்கிருந்து எம்.ஆர்.காந்தி மற்றும் கட்சியினர் நாகர்கோவில் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில் இது குறித்து நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் தொடர்புகொண்டு தெரிவித்த நிலையில் உடனடியாக திராவிட முன்னேற்றக் கழக கொடிகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் நாளை முதல் இது குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.