மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்தம்...!

மின் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொருளாதார மந்த நிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு நிலை கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியதோடு, பீக் ஹவர்ஸ் கட்டணத்தையும் 15 சதவீதம் உயர்த்தி அறிவித்தது.

அரசின் இந்த உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதன்படி, திருப்பூரில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவு தெரிவித்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக ஒரு நாளில் திருப்பூரில் மட்டும் 500 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதையும் படிக்க : காவல்துறையினரை ஆபாசமாக பேசிய மது போதை ஆசாமி...!

இதே போல், சேலத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வருவாய் இழப்பு ஏற்பட்டு 5  கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

கோவையில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குறு சிறு தொழில் அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்டத்தில் அரியமங்கலத்தில் செயல்பட்டு வரும் சிப்காட் வளாகம், திருவெறும்பூர் மற்றும் துவாக்குடி சிப்காட் தொழில் வளாகம், வாழவந்தான் கோட்டை தொழில் வளாகங்களைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்கள்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.