"இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை துவங்கிய இடம் தமிழ்நாடு" ஆளுநர் ஆர்.என்.ரவி!

"இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை துவங்கிய  இடம் தமிழ்நாடு" ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு என்பது ஆன்மீகத்தின் தலைநகரம் மட்டும் இல்லை. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை துவங்கிய ஒரு இடம். தமிழகத்தில் நமக்கு தெரியாத நூற்றுக்கணக்கான சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வீரர்கள் உள்ளனர் என ஆளுநர் ஆர்.என். ரவி பேசியுள்ளார்.

ஆளுநரின் எண்ணித் துணிக திட்டத்தின் கீழ் படைவீர்கள், வீர மங்கையர்கள் மற்றும் வீரதீர பதக்கங்கள் பெற்ற முப்படை ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடல்  நிகழ்வில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நமது நாட்டில் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாராட்டுகள் முறையாக வழங்கபடுவதில்லை. நாட்டிற்கு இராணுவம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை திருக்குறளில் கூறப்பட்டு உள்ளது. ஒரு நாட்டின் ராணுவம் பலமாக இருந்தால் அது அரசனுக்கு மட்டும் இல்லாமல் மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கிறது என தெரிவித்தார். மேலும் பலமான ராணுவம் என்பது ஒரு நாட்டின் பெருமை என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவில் தேசபக்தி,தெய்வபக்தி இரண்டையும் பிரிக்க முடியாது என்றும், இராணுவ வீரர்கள் ஓய்வுக்கு பின் போதுமான வசதிகள் கிடைக்காமல் இருந்தாலும் அவர்கள் தவறான பாதைக்கு செல்வதில்லை. தவறு செய்தால் அதனை தடுக்க செய்கின்றனர். ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் நாட்டின் அளவிட முடியாத ஒரு சொத்து என தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தின் இறந்த ராணுவ வீரர்கள் எந்த பகுதியை சார்ந்தவர்கள் என பார்த்து அருகில் உள்ள பள்ளியில் அவருடைய படத்தை பொறுத்த வேண்டும் என்றும் அவருடைய நினைவு நாளில் அவருக்காக விழா எடுக்க வேண்டும் என்ற ஆலோசனை தமக்கு இருப்பதாக கூறினார். இதற்காக பெரிய அளவில் நிதி செலவிட வேண்டிய தேவை இல்லை ஆனால் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு அது பெருமையை தரும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் அரசு நிதி அளிக்கவில்லை என்பதால் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை மறுத்து உள்ளனர். இதனை தெரிந்துக்கொண்டு மத்திய இராணுவத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதினேன். பின்னர் நிதியை ஒதுக்கினார்கள் இருந்தாலும் மீண்டும் அந்த நிலை தொடர்கிறது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் மிகவும் கெளரவமாக நடத்தப்பட வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்கும் கடிதம் எழுதுவேன் என உறுதி அளிக்கிறேன் என கூறிய அவர்  முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் வாட்ஸ்அப் குழு அமைத்து குடும்பமாக செயல்பட வேண்டும். அந்த குழுவில் உங்கள் பிரச்சினைகள் மட்டும் இல்லாமல் மகிழ்ச்சியும் தெரிவிக்கலாம் என தெரிவித்தார். மேலும் அப்படி குழு அமைத்து நீங்கள் அதில் உங்கள் பிரச்சினையை தெரிவித்தால் உங்கள் குரல் வெளியே கேட்கும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு என்பது ஆன்மீகத்தின் தலைநகரம் மட்டும் இல்லை.  இந்தியாவின் சுதந்திர போராட்டத்தை துவங்கிய ஒரு இடம். தமிழகத்தில் நமக்கு தெரியாத நூற்றுக்கணக்கான சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வீரர்கள் உள்ளனர் எனக் கூறினார்.

இதையும் படிக்க:கள்ளசந்தையில் மதுபானம் வாங்கிக்குடித்த இருவர் பலி!!!