15 மாதங்களில் முன்னேறிவரும் தொழில்துறை...பெருமிதம் தெரிவிக்கும் முதலமைச்சர்!

15 மாதங்களில் முன்னேறிவரும் தொழில்துறை...பெருமிதம் தெரிவிக்கும் முதலமைச்சர்!

தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

4.0 தொழில்துறை மாநாடு:

சென்னை தரமணியில் நடைபெற்ற 4.0 தொழில்துறை மாநாட்டில் தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். முன்னதாக, தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையம், தமிழ்நாடு ஸ்மார்ட் மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையம், மெய்நிகர் விமானி பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட சிறப்பு மையங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, இந்த மாநாட்டில் முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

15 மாதங்களில் முன்னேறி வரும் தொழில்வளர்ச்சி துறை:

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 15 மாதங்களில் அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறிக்கொண்டு இருப்பதாகவும், தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிக்க: 10% இட ஒதுக்கீடுக்கான தீர்ப்பு...ராமதாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏராளமான மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகளும் தமிழ்நாட்டிற்கு பலன் தரும் மாநாடுகளாக அமைந்துள்ளதாகவும் கூறினார்.  

1 டிரில்லியன் பொருளாதாரம் தான் இலக்கு:

தொடர்ந்து, 2030ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்குடன் தொழில்துறை செயல்படுவதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டில் உயர்கல்வி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேடி வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.