எழுவர் விடுதலை முதல் ஆன்லைன் ரம்மி வரை...ஆளுநரின் செயல்பாடு என்ன? திரும்பப் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

எழுவர் விடுதலை முதல் ஆன்லைன் ரம்மி வரை...ஆளுநரின் செயல்பாடு என்ன? திரும்பப் பெற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்!

2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கிய நிலையில், கடும் அமளியில் ஈடுபட்ட திமுக கூட்டணிக்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை தெரிந்தே தவிர்த்த ஆளுநர், தமிழ்நாடு வாழ்க எனக்கூறி உரையை முடித்தார்.

ஆளுநர் உரையுடன் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்:

நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை சென்னையில் கூடிய நிலையில், வளாகத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மறைந்த எம்எல்ஏ திருமுருகன் ஈ.வெ.ரா படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந் சட்டப்பேரவை தொடங்கியதையடுத்து, காகிதமில்லா கூட்டம் என்பதால் கையடக்க கணினி வழியே உறுப்பினர்கள் கூட்டத்தை கவனித்தனர். பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ.பன்னீர் செல்வமும் அருகருகே அமர்ந்திருந்தனர். தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி உரையைத் தொடங்கிய சில நொடிகளிலேயே, தமிழ்நாடு வாழ்க என திமுக கூட்டணிக் கட்சியினர் முழக்கமிட்டனர்.

வெளிநடப்பு செய்த திமுக கூட்டணிக் கட்சிகள்:

கடும் கோஷங்களுக்கு மத்தியில் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழில் பொங்கல் வாழ்த்துக்களுடன் ஆளுநர் உரையைத் தொடங்கினார். அப்போது எங்கள் நாடு தமிழ்நாடு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தைத் திணிக்காதே என தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆன்லைன் சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் தலைமையில், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிக்க: இந்தியா VS இலங்கை: சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யகுமார் யாதவ்...டி20 தொடரை கைப்பற்றியது யார்?

இந்தியாவுக்கே முன்னோடி தமிழ்நாடு:

தொடர்ந்து அவையில் பேசிய ஆளுநர், போதைப்பொருட்களை ஒழிக்க மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடு முன்னோடியாக உள்ளதாகவும் தெரிவித்தார். கிராமப்புற மாணவர்களுக்கு எதிராக நீட் தேர்வு உள்ளதாக குறிப்பிட்ட அவர், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அதன் மசோதா அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாக கூறினார். பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என தமிழ்நாடு அரசு கருதுவதாகவும் பரந்தூரில் அமைக்கப்படவுள்ள பசுமை விமான நிலையத்தால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க முடியும் எனவும் அவர் கூறினார். 

வாக்கியங்களை புறக்கணித்து பேசிய ஆளுநர்:

சென்னை மாநகராட்சி எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு மாமல்லபுரத்தில் துணைநகரம் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் உரையடக்க பக்கங்களில் இருந்த திராவிட மாடல் என்ற வார்த்தையை ஆளுநர் புறக்கணித்து பேசாமல் தவிர்த்தார். தொடர்ந்து தமிழ்நாடு வாழ்க எனக்கூறி ஆளுநர் தனது உரையை முடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெளிநடப்பு செய்த காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை, ஆன்லைன் ரம்மியால் பலர் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆளுநரே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்தார். 

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும்:

இதனிடையே, எழுவர் விடுதலை முதல் ஆன்லைன் ரம்மி வரை ஆளுநர் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகவும், ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டுமெனவும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தினார்.