பரந்தூரில் கருப்பு கொடி ஏந்தி மக்கள் போராட்டம்...கிராம மக்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா?

பரந்தூரில் கருப்பு கொடி ஏந்தி மக்கள் போராட்டம்...கிராம மக்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா?
Published on
Updated on
2 min read

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

புதிய விமான நிலையம்:

சென்னை மீனம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு போதுமான இடம் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, தமிழக அரசு சார்பில் இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு  செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. 

கிராம விளைநிலங்கள் கையகம்:

அரசு பரிந்துரை செய்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக, பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 12 கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்களும் வெளியானது. 

மக்கள் எதிர்ப்பு:

நிலங்கள்  கையகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, பரந்தூர், ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 12 கிராமங்களில் உள்ள மக்கள் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தீர்மானம்:

இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஏகனாபுரம் கிராம சபைக் கூட்டத்திலும் புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்:

இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஏகநாபுரம் கிராம மக்கள் 300-க்கும் மேற்பட்டோர், கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் உட்பட கிராமத்தை சேர்ந்த அனைவரும் கலந்து  கொண்டு விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி கண்டன பதாகைகளை கைகளில் ஏந்தி பேரணியாகச் சென்றனர்.

போராட்டத்தில் பேசிய பெண்:

போராட்டத்தின் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மைதிலி என்ற பெண், தங்களுக்கு விவசாய நிலங்களும் நீர் நிலைகளும் மட்டுமே முக்கியம் என்று கூறினார். மேலும், தங்களுக்கு அரசு அளிக்கும் உதவிகள் எதுவும் தேவையில்லை என்றும் தங்களை நிம்மதியாக வாழவிட்டால் அதுவே போதும் என்றும் கூறினார்.

அரசு ஏற்குமா?:

புதிய விமான நிலையம் அமைப்பதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தும் மக்களின் கோரிக்கையை அரசு ஏற்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com