ஆயுள்தண்டனை கைதிக்கு விடுப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம்!

பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக ஆயுள் தண்டனை கைதிக்கு விடுப்பு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழீழ விடுதலை போராட்டத்தை ஆதரித்து ரயில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக கியூ பிரிவு போலீசார் பதிவுசெய்த வழக்கில், கடலூரை சேர்ந்த செந்தில் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் தனது கணவர் செந்தில்குமாருக்கு விடுப்பு கோரி மனைவி வேம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதையும் படிக்க : மொழியில் சிக்கிய குஷ்பு... தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் சினிமா பிரபலங்கள்...!

இந்த வழக்கு தொடர்பாக அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், இரு பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு நிதி ஆதாரம் திரட்டுவது சிரமமாக உள்ளதால், கணவரை விடுப்பில் அனுப்ப வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்நிலையில், ஆயுள் கைதியான செந்தில்குமாருக்கு தனது பிள்ளைகளின் படிப்பு செலவிற்கு பணம் திரட்டுவதற்காக 28 நாட்கள் விடுப்பு வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் வாரம் ஒரு முறை கையெழுத்திட வேண்டும் என்றும், எந்தவித சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.