ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம்...! விசாரித்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்..!

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து அவசர சட்டம்...! விசாரித்து உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்..!
Published on
Updated on
1 min read

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்ட ஆல் இந்தியா கேமிங் ஃபெடரேஷன் என்ற அமைப்பு சார்பாக அதன் பொதுச் செயலாளர் சுனில் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ஆன்லைன் விளையாட்டுகளை பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் வழங்கக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆன்லைன் விளையாட்டுகளின் தீமைகள் குறித்த எச்சரிக்கை அம்சங்களோடு தான் விளையாட்டுகள் வழங்கப்படுவதாகவும், அடிமை ஆவதை தடுப்பதற்கான சோதனைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு ரம்மி மற்றும் போக்கர் போன்ற திறமையான விளையாட்டுகளை சூதாட்டம் என கூறி  தடை செய்து உயர் நீதிமன்றம், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போது மீண்டும் ரம்மி மற்றும் போக்கர் உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசரச் சட்டத்தை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

போக்கர் மற்றும் ரம்மி ஆகியவை திறமைக்கான விளையாட்டுகள், இதில் திறமையான வீரர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும், 1957 ஆம் ஆண்டின் மேற்கு வங்க சூதாட்டம் மற்றும் பரிசுப் போட்டிகள் சட்டம், 'கேமிங் அல்லது சூதாட்டம்' என்ற வரையறையிலிருந்து போக்கரை விலக்கியுள்ளதாகவும்,  2009 ஆம் ஆண்டு சிக்கிம் அரசு ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை விதிகள், போக்கர் மற்றும் ரம்மியை உரிமத்தின் கீழ் விளையாட அனுமதிக்கின்றன என்றும், நாகாலாந்து அரசு போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாக வகைப்படுத்தியுள்ளதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்கள் போக்கர் மற்றும் ரம்மியை திறமைக்கான விளையாட்டுகளாகக் கருதுவதாகவும்,  அதை பந்தயம் மற்றும் சூதாட்டத்தின் எல்லைக்கு வெளியே வைத்துள்ளது எனவும் மற்ற மாநிலங்களின் சட்டங்கள் மற்றும் உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை கருத்தில் கொள்ளாமல் கொண்டு வரப்பட்டுள்ள ஆன்லைன் தடை சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதசக்ரவரத்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை நவம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைத்ததுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com