கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடம்; நடிகர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ்!

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டிடம்; நடிகர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் நோட்டீஸ்!

கொடைக்கானலில் பிரபல நடிகர்கள் அனுமதியின்றி கட்டிடம் கட்டியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் முறையான பதில் அளிக்கவில்லை எனில் உள்ளாட்சி சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை  விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமை வகித்தார். நடைபெற்ற கூட்டத்தில் வருவாய் துறை, வனத்துறை, தோட்டக்கலை துறை, போக்குவரத்து துறை, காவல் துறை என பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் தங்களது பகுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் வில்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அரசின் விதிமுறைகளை மீறி நடிகர் பாபி சிம்ஹா மூன்று மாடி கட்டிடம் கட்டி வருவதாகவும், மலை கிராம விவசாயிகள் பயன்படுத்தும் சாலையை ஆக்கிரமிப்பு செய்து அப்பகுதியில் செல்லும் விவசாயிகளை ஒருமையில் பேசுவதாகவும், குற்றம் சாட்டினர். இதேபோல் பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ் அரசு அனுமதியை மீறி கனரக  இயந்திரங்கள் கொண்டு சாலை அமைத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் கோட்டாட்சியர் ராஜா தெரிவித்தார்.  இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட இடத்தில் வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் கொடைக்கானல் வில்பட்டி பேத்துப்பாறை அருகே ஓராவி அருவி பகுதியில், தான் வாங்கி இருந்த 7 ஏக்கர் நிலத்திற்கு அருகில் உள்ள பொதுப் பாதையை ஆக்கிரமித்து அப்பகுதி மக்கள் பாதையை பயன்படுத்த விடாமல் செய்ய முயற்சிப்பதாக கடந்த வாரம் புகார் எழுந்த நிலையில், 
அவர் வாங்கியிருந்த இடத்திற்கு அருகில் இருந்த சதுப்பு நிலத்தையும் ஆக்கிரமித்துள்ளார் என்ற புகார் எழுந்தது.

இந்த விவகாரத்தை பிரதம மந்திரி அலுவலகத்திற்கு அசோகன் என்பவர் புகார் மனுவாக அனுப்பியதன் அடிப்படையில், புகாரின் பேரில் வருவாய்த்துறை மண்டல உதவி அலுவலர் பாண்டியன் தலைமையிலான குழு ஆய்வு செய்ததில் பிரகாஷ் ராஜ் 2012 ஆம் ஆண்டு முறையான பத்திர பதிவின் மூலம் நிலத்தை பெற்றுள்ளதாகவும், அப்பகுதியில் சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு எதுவும் செய்யப்படவில்லை என ஆய்வுக்கு பின்னர் வருவாய்த் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் அவரது இடத்திற்கு அருகில் செல்லும் பொது பாதையை அப்பகுதி  பழங்குடி மக்கள், விவசாயிகள் என யாரும் செல்ல தடை இல்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அனுமதியின்றி பிரகாஷ்ராஜ் கட்டிடம் கட்டியதாக புகாரில் வில்பட்டி ஊராட்சி மூலம் நோட்டீஸ் வழங்கி ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது . இதனைத் தொடர்ந்து பாபி சிம்ஹா அனுமதி இன்றி கட்டிடம் கட்டி வருவதாக எழுந்த புகாரியின் அடிப்படையில் அவர் கட்டி வரும் கட்டிடம் அவரின் பெயரில் இல்லை எனவும் அவரது குடும்ப உறுப்பினர்கள்  பெயரில் நடைபெற்று வருவதாகவும், இதற்கான அனுமதி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2019 ஆண்டு சிறப்பு அனுமதி வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அனுமதியை மீறி கூடுதல் அளவு காட்டியதற்கு வில்பட்டி ஊராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் முறையான பதில் அளிக்கவில்லை எனில் உள்ளாட்சி சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:ஆயிரக்கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்!