விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் : வெளிக்காயம் இல்லாததால் ஊராட்சி செயலருக்கு ஜாமின்..!

விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலர் : வெளிக்காயம் இல்லாததால் ஊராட்சி செயலருக்கு ஜாமின்..!
Published on
Updated on
1 min read

காந்தி ஜெயந்தின்று நடந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவரை ஊராட்சி மன்ற செயலர் எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை கிளப்பிய நிலையில், குற்றவாளிக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது மதுரை நீதிமன்றம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பிள்ளையார்குளம் ஊராட்சி கங்காகுளம் பகுதியில் அக்டோபர் 2-ம் தேதியன்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. 

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மான்ராஜ் தலைமையில், அரசு அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த கிராமசபை கூட்டத்தில் அம்மையப்பர் என்ற விவசாயி ஒருவர் ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன் மீது அடுக்கடுக்கான புகார்களை அடுக்கினார். 

ஊராட்சி செயலாளராக இருந்த தங்கபாண்டியனை மாவட்ட கலெக்டர் மாற்றிய பின்னும், கிராமசபை கூட்டத்துக்கு வந்தது ஏன்? என்பதுதான் அந்த விவசாயி கேட்ட கேள்வி. அதற்காக கடும் ஆத்திரம் அடைந்த ஊராட்சி செயலாளர் தங்கபாண்டியன், ஓடோடி வந்து விவசாயி அம்மையப்பரின் நெஞ்சில் காலால் எட்டி உதைத்தார். 

அகிம்சையை போதித்த காந்தியின் பிறந்தநாள் அன்று நடந்த இப்படியொரு வன்முறை சம்பவத்தால் தமிழகம் முழுவதும் அதிர்வலைக  உண்டானது. 

இதையடுத்து விவசாயியை எட்டி உதைத்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் போலீசாருக்கு பயந்து தலைமறைவானார். இந்நிலையில் தங்கபாண்டியன் மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்தார். விவசாயியை எட்டி உதைத்தது தவறுதான் என கூறியவர், இதற்காக மன்னிப்புக் கேட்பதாக தங்கபாண்டியன் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை விசாரித்த நீதிபதி சிவஞானம், குற்றம் சாட்டப்பட்டவரே தாமாக முன்வந்து மன்னிப்பு கோரியதாலும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வெளிக்காயம் இல்லாத காரணத்தாலும் தங்கபாண்டியனுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். 

இந்த தீர்ப்பை அறிந்த கங்காகுளம் பகுதி மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். வெளிக்காயம் இல்லை என்பதை காரணமாக கூறும் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட விவசாயியின் மனக்காயத்தை கண்டுகொள்ளவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com