சாதி மறுப்பு திருமணத்தை தடுத்து நிறுத்திய பெற்றோர்........ பெண்ணை வழுகட்டாயமாக இழுத்து சென்ற உறவினர்கள்....நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பாரதி என்பரும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்த மதன்ராஜ் என்பவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறவே, கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். ஒருக்கட்டத்தில் பெண்ணின் வீட்டில் இருவரது திருமணத்திற்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், இருவரும் பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக கடந்த 9 ஆம் தேதி திருச்சியில் இருந்து நாகை வந்த இருவரும், இன்று பதிவு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். முன்னதாக தாலிக்கட்டி நாகையில் உள்ள ஒரு கோவிலில் திருமணத்தை முடித்த காதல் ஜோடிகள், வழக்கறிஞர் மூலமாக முறைப்படி பதிவு திருமணம் செய்ய நாகை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
அங்கு பதிவு திருமணம் செய்து இறுதியாக கையெழுத்து போடும் பொழுது நாகை சார்பதிவாளர் அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண்ணின் உறவினர்கள், பெண்ணை அடித்து வலுக்கட்டாயமாக இழுத்துள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
உறவினர்கள் பெண்ணை அங்கிருந்து நாகை நீதிமன்ற வளாகத்தின் வழியே இழுத்து வந்துள்ளனர். அப்போது பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் பெண்ணை இழுத்து சென்று காரில் ஏற்றுவதற்கு முயற்சி செய்தனர்.
இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் காரை மறித்து பெண்ணை கீழே இறக்கிவிடும்படி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்ணின் தந்தை தான் ஒரு கிராம நிர்வாக அலுவலர் என்றும், தன்னை தடுக்க கூடாது என்றும் அங்கிருந்த பெண் காவலரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அங்கு வந்த கூடுதல் போலிசார் காரை மறித்து பெண்ணை மீட்டு நீதிபதியிடம் அழைத்து சென்றனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட காதலர் மதன்ராஜ், பெண்ணை கடத்தி சென்றதாகவும், இருவருக்கும் பாதுகாப்பு வழங்கி பெண்ணை மீட்டுத்தர வேண்டும் என்றும் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
.png)
