நாய்களை தாக்கும் பார்வோ வைரஸ்! தடுப்பூசி போட்டால் தப்பிக்கலாம்!!  

கால்நடைகளை தாக்கும் வைரஸ் ஒன்று நாய்களுக்கு வேகமாக பரவுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நாய்களை தாக்கும் பார்வோ வைரஸ்! தடுப்பூசி போட்டால் தப்பிக்கலாம்!!   
Published on
Updated on
2 min read

விலங்குகளுக்கு இடையே Parvo virus என்ற வைரஸ் தொற்று, தற்போது வேகமாக பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த வைரஸ் நாய்களுக்கு அதிகளவில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பார்வோ வைரஸ் காற்றின் மூலமாக பரவும் என்றும் விலங்குகளுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்ட நாய்கள் சோர்வுடன் காணப்படும் எனவும்  இதனை அடுத்து வாந்தி, ரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதனால் உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் நாய்கள் இறக்க நேரிடும் என கால்நடை மருத்துவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

மேலும் பார்வோ வைரஸால் பாதிக்கப்பட்ட நாயின் எச்சம், சிறுநீர், மலத்தில் இருந்து கிருமிகள் பரவி மற்ற நாய்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பார்வோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நாய்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை கட்டுப்படுத்த நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் பார்வோ வைரஸ் தொற்று ஏற்படாமல் காக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பொதுவாக நாய்களுக்கு 3 தவணை பார்வோ வைரஸ் தடுப்பூசிகளும், 2 தவணை ரேபிஸ் தடுப்பூசிகளும் செலுத்த வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால், பெரும்பாலானோர் தங்களது செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடவில்லை. இதன் விளைவாகவே தற்போது பார்வோ வைரஸ் நோய் தொற்று அதிகரித்து இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட்டால் பார்வோ வைரஸ் பரவாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் தெரு நாய்களின் நிலை என்ன என்பது குறித்து  அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com