திருவாரூரில் சோகம்: மின் தடையால் அரசு மருத்துவமனையில் நோயாளி உயிரிழப்பு!

Published on
Updated on
1 min read

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லாததால் வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்றுவந்த பெண் ஒருவர் உயிரிழந்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா பகுதியை சேர்ந்த தூய்மை பாணியாளர் அமராவதி என்பவர், நுரையீரல் சிகிச்சைக்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் பிரச்சனைக்காக சென்ற இவர், கடந்த இரண்டு நாட்களாகவே அவர் அவசர சிகிச்சை பிரிவில் வெண்டிலேட்டர் மூலமாக சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் இன்று மதியம் திடீரென சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் தடைப்பட்டது. இதன் காரணமாக, வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் பெற்று வந்த அமராவதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அமராவதி உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்ட போது, நாங்கள் என்ன செய்வது; நீங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியதாக வேதனை தெரிவித்தனர்.

அண்மைகாலமாகவே, அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது ஏற்பட்டு வரும் சில பிரச்சனைகளால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், தமிழக அரசு சரியான தீர்வு காண வேண்டும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கின்றனர். ஏற்கனவே, அரசு மருத்துவமனைகளில் சரியான மருத்துவ சிகிச்சை கொடுப்பதில்லை என அரசு மீது அதிருப்தியில் இருக்கும் மக்களுக்கு, தற்போது மீண்டும் மின்தடையால் ஒரு பெண் உயிரிழந்திருப்பது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறுகின்றனர்.

இதனிடையே, திருவாரூரில் மின் தடையால் நோயாளி உயிரிழப்பு குறித்து வேதனை தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு வளர்ந்து நிற்கும் சூழலில் மின் தடையால் நோயாளி இறந்தார் என்பது உலக அரங்கில் பெரும் அவப்பெயரை பெற்றுக் கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com