”எங்கள் இடத்தை எங்களுக்கு விட்டு கொடுங்கள்” கண்ணீர் மல்க அமைச்சரின் காலில் விழுந்த பெண்மணி!

”எங்கள் இடத்தை எங்களுக்கு விட்டு கொடுங்கள்” கண்ணீர் மல்க அமைச்சரின் காலில் விழுந்த பெண்மணி!

செங்கல்பட்டில் பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

புதிய பேருந்து நிலையத்திற்கு கோரிக்கை:

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகே இருக்கும் பணிமனையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்ற தமிழக அரசு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஒப்புதலை அளித்தது. 

அதன்படி, 14 ஏக்கர் பரப்பளவில் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, செங்கல்பட்டு அடுத்த நேதாஜி நகர் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான 17 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 52 வீடுகள் இடையூராக இருப்பதால் அந்த வீடுகளை அகற்றக்கோரி சம்மந்தப்பட்ட நபர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அப்பகுதி மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு இருப்பதால் வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளனர். 

ஆய்வு செய்ய சென்ற அமைச்சர்கள் : 

இந்நிலையில் இன்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் என அனைவரும் பேருந்து நிலையத்திற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். 

முற்றுகையிட்ட மக்கள் :

அமைச்சர்களின் வருகை குறித்து தகவலறிந்த நேதாஜி நகர் மக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, பெண் ஒருவர் அமைச்சர் சேகர்பாபுவிடம் தயவு கூர்ந்து வந்து எங்கள் வீட்டை வந்து பாருங்கள், இவ்வளவு பெரிய வீட்டை நாங்கள் எங்கே கட்டுவோம் என்று கண்ணீர் மல்க கூறி கூச்சலிட்டார். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபுவின் காலில் விழுந்த அந்த பெண்மணி எங்கள் இடத்தை எங்களுக்கு விட்டு கொடுங்கள் என அழுது கொண்டே கோரிக்கை வைத்தார். தொடர்ந்து, நேதாஜி நகர் மக்கள் கீழே உட்கார்ந்தும், உருண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கைது செய்யப்பட்ட மக்கள் : 

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்ப்ரனீத் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார், சமரசம் பேசியும் மறியலை கைவிடாமல் சாலையில் உருண்டு புறண்டு அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வேறு வழியின்றி குண்டுகட்டாக தூக்கி கைது செய்தனர். இச்சம்பவத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அப்பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.

இருப்பினும், 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் இருக்கும் மக்களின் வீடுகளை அகற்றக்கோரி தமிழக அரசு உத்தவிட்டிருக்கும் நிலையில், அப்பகுதி மக்களின் இந்த ஆர்ப்பாட்டமும், கண்ணீரும், அவர்களின் கோரிக்கையையும் ஏற்று தமிழக அரசு முடிவை கைவிடுமா? அல்லது வேறு மாற்று ஏற்பாடு செய்யுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...