சுருக்குமடி வலைகள் பயன்படுத்த அனுமதி...ஆனால், தமிழ்நாட்டில்...!

சுருக்குமடி வலைகள் பயன்படுத்த அனுமதி...ஆனால், தமிழ்நாட்டில்...!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன் பிடிக்க சுருக்குமடி வலைகளை பயன்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

தமிழக கடற்பரப்பில் சுருக்கு மடி வலையை கொண்டு மீன்பிடிக்கும் போது, பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் 'சுருக்கு மடி வலையை' கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. ஆனால், சுருக்குமடி வலையை பயன்படுத்த மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்ததை அடுத்து, தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள 12 நாட்டிகல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன் பிடிக்க சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் நலசங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இதை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், சுருக்குமடி வலைகளை தமிழ்நாட்டின் கடற்பரப்பில் பயன்படுத்த தடை விதித்து, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தனர். இதையடுத்து, சுருக்குமடி வலை பயன்பாட்டை அனுமதிக்கக்கோரி மீனவர் நலசங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். மேலும், 12 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிகளில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் மீனவர்களை தமிழக அரசு தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. 

அதன்படி, உச்சநீதிமன்றத்தில் இடையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. அதில், இயற்கை வளங்களை பேணிக்காக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்பின்னர், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கை உத்தரவுக்காக ஒத்தி வைத்தனர். 

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அதில் தமிழ்நாட்டில் 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் சுருக்குமடி வலையை திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் மீன்பிடிக்க பயன்படுத்தலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தொடர்ந்து, பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே வலைகளைப் பயன்படுத்தலாம் என்றும், குறிப்பிட்ட நேரத்திற்குள் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்ப வேண்டும் என்றும், படகுகளைக் கண்காணிக்க டிராக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில் தமிழ்நாட்டின் எல்லைக்கு உட்பட்ட கடல் பகுதியில் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட அரசாணைக்குள் தற்போது தலையிட முடியாது என்றும், நீதிபதிகள் குழு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com