பிரச்சாரப் பயணம், பேரணிக்கு அனுமதி கோரி மனு..!

பிரச்சாரப் பயணம், பேரணிக்கு அனுமதி கோரி மனு..!

மத்திய அரசுக்கு எதிராக 10 நாட்கள் பிரச்சார பயணம் மற்றும் பேரணி நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தெடர்ந்துள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் வழக்கில் தங்களது கட்சியின் அறுபதாவது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 
  
மத்திய அரசின் மத வெறி நடவடிக்கை, கார்ப்பரேட் ஆதரவு, மக்கள் வாழ்வாதார பிரச்சினை, சிறுபான்மை மக்கள் மீதான வெறுப்பு அரசியல் உள்ளிட்டவைகளுக்கு எதிராகவும், மாநில அரசுக்கு எதிரான நடவடிக்கை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாநகரம், நகரங்கள், ஒன்றியத் தலைநகரங்களில் வரும் 21ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை பிரச்சார பயணங்கள், பேரணி நடத்தவுள்ளதாகவும் இது தொடர்பாக கடந்த பத்தாம் தேதி அனுமதி கோரி தமிழக டிஜிபியிடம் மனு அளித்தாகவும், ஆனால் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என  தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு எந்த ஒரு தொந்தரவு அளிக்காத வகையில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் நிகழ்ச்சி நடத்த உள்ளதாகவும், தங்கள் கட்சி சார்பில் நடத்தக்கூடிய நிகழ்வுகளில் எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்பட்டது இல்லை என்றும் அவர் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளார்.

பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்பான ஆர். எஸ். எஸ் பேரணியை காரணம் காட்டி
எங்கள் கட்சியின் பேரணிக்கு கடைசி நேரத்தில் காவல்துறை அனுமதி மறுத்து விட வாய்ப்புள்ளது. எனவே எங்கள் கட்சியன் பிரச்சார பயணம், பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.