திமுக ஆட்சியில் நிகழும் தொடர் வன்முறையை கண்டித்து போராட்டம்...அனுமதி கேட்டு பாஜக சார்பில் மனு!

திமுக ஆட்சியில் நிகழும் தொடர் வன்முறையை கண்டித்து  போராட்டம்...அனுமதி கேட்டு பாஜக சார்பில் மனு!

திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்முறை சம்பவத்தை கண்டிக்கும் விதமாக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரர் பிரபு நாயக்கின் கொலை சம்பவம் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜக பட்டியலின தலைவர் தடாபெரியசாமியின் வீடு மற்றும் காரை அடித்து உடைத்த சம்பவம் என தொடர்ச்சியாக திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவத்தை கண்டிக்கும் விதமாக பாஜக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி கேட்டு பாஜக மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் மற்றும் பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் பால் கனகராஜ் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். 

இதையும் படிக்க : குடிசை இல்லாதப் பகுதிகளை உருவாக்குவதே எங்களின் குறிக்கோள் - முதலமைச்சர் பேச்சு!

மனு அளித்த பின் செய்தியாளர்களை சந்தித்த கரு. நாகராஜன், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகத்தில் அளவில்லாத வன்முறை சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரரின் கொலை, நங்கநல்லூரில் காவலர் கொலை, திருவண்ணாமலை ஏடி. எம் கொள்ளை என தினமும் கொலை,கொள்ளை சம்பவங்கள் நடந்து வருகிறது. இதே போல சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக பிரமுகர் கொலை, பாஜக பட்டியலின தலைவர் தடா பெரியசாமியின் வீடு, கார் கண்ணாடி உடைப்பு என பாஜக பிரமுகர்களும் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களுக்கு தமிழகத்தில் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை எனவும், திமுகவின் அடையாளத்தை பயன்படுத்தி மட்டுமே அவர்களது பிரமுகர்கள் துணிந்து கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள் என அவர் குற்றஞ்சாட்டினார். 

தமிழகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை திமுக ஆட்சியில் இருப்பதாகவும், இந்த அநீதி ஆட்சி மற்றும் அலட்சியமான திமுக ஆட்சியை கண்டிக்கும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் வருகிற 21ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாகவும், அதன் பின்னர் ஊர்வலமாக சென்று போர் நினைவு சின்னத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி போராட்டம் நடத்த இருப்பதாகவும் இதற்கு அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்து இருப்பதாகவும் கரு. நாகராஜன் கூறினார். 

மேலும் ஈரோடு கிழக்கு தேர்தலில்  வாக்காளர்கள் குளறுபடி மற்றும் பணப்பட்டுவாடா நடைபெறுவதாகவும், திமுக இருக்கும் இடத்தில் சுமூகமான தேர்தல் நடைபெறுவது சந்தேகம் எனவும், திமுக மோசமான ஆட்சி என்பது பொதுமக்களுக்கே தெரியும் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.