செயின் பறித்து ஆற்றில் குதித்த இருவரை மடக்கி பிடித்த போலீசார்!

கடலூர் மாவட்டத்தில் பெண் ஒருவரிடம் தங்கசங்கிலியை பறித்துவிட்டு பொதுமக்கள் விரட்டியதும் கொள்ளிடம் ஆற்றில் குதித்து தப்பி மயிலாடுதுறை மாவட்ட எல்லை பகுதிக்கு வந்த இருவரையும்கொள்ளிடம் போலீசார் மடக்கி பிடித்தனர்.

செயின் பறித்து ஆற்றில் குதித்த இருவரை மடக்கி பிடித்த போலீசார்!

கடலூர்: குமராட்சி பகுதியில் இன்று காலை அவ்வழியாக நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துகொண்டு இருவர் இருசக்கரவாகனத்தில் தப்பிக்க முயன்றனர். இதனை பார்த்த சாலையில் சென்ற பொதுமக்கள் தங்கசங்கிலியை பறித்து சென்ற கொள்ளையர்களை விரட்டிசென்றனர்.

பொதுமக்கள் விரட்டுவதை பார்த்த கொள்ளையர்கள் இருவரும் திருடிய தங்கசங்கிலியையும், தாங்கள் ஓட்டிவந்த இருசக்கரவாகனத்தையும் குமராட்சி பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்று கரையோரம் விட்டு விட்டு, ஆற்றில் குதித்து நீச்சல் அடித்து தப்பி வந்தனர்.

ஆற்றில் திருடர்கள் குதித்து தப்பிவருவது குறித்து மக்கள் மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் அறிவுறுத்தலின் படி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீசார் சீர்காழி அருகே பணங்காட்டான்குடி கொள்ளிடம் ஆற்று பகுதிக்கு விரைந்து சென்று ஆற்றில் நீச்சல் அடித்து வந்த கொள்ளையர்கள் இருவரையும் மடக்கிபிடித்தனர்.

பின்னர் சீர்காழி காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில் கொள்ளையர்கள் சீர்காழி அடுத்த வாணகிரி பகுதியை சேர்ந்த ஜவகர்(22), மற்றும் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த கண்ணன்(25) என்பதும் அவர்கள் பெண்ணிடம் தங்கசங்கிலியை பறித்துவிட்டு ஆற்றில் குதித்து தப்பிவந்ததும் தெரியவந்தது. உடனடியாக இருவரையும் குமராட்சி போலீசாருக்கு தகவல் அளித்து அவர்களிடம் ஒப்படைத்தனர்.