ED Raid : முதலமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் பொன்முடி ஆலோசனை...!

ED Raid :  முதலமைச்சரை நேரில் சந்தித்து அமைச்சர் பொன்முடி ஆலோசனை...!

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தனது வீட்டில் அமலாக்கத் துறை  நடத்திய சோதனை தொடர்பாக முதலமைச்சரை சந்தித்துப் பேசினார். 

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியின் வீடு, அவரது மகன் கௌதம சிகாமணியின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் கடந்த 17 ஆம் தேதி காலை முதல் மாலை வரை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

இதனையடுத்து, அன்று மாலை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கெளதம சிகாமணியையும் சென்னை நுங்கம் பாக்கதில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பலத்து பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் இருவரிடமும், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்ட நிலையில், அதிகாலை 3 மணியளவில் இருவரும் வீடு திரும்பினர். 

இதையும் படிக்க : யோகிபாபு நடிப்பில் அட்டகாசமாக உருவாகும் புதிய சீரிஸ்...அதிகாரப்பூர்வமாக அறிவித்தது டிஸ்னி + ஹாட்ஸ்டார்!

விசாரணையை தொடர்ந்து, 18 ஆம் தேதி மாலையும் இருவரும் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்றையதினம் அமைச்சர் பொன்முடியும், அவரது மகனும் ஆஜரான நிலையில், அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பெங்களூரூவில் நடைபெற்ற எதிர்கட்சிகள் கூட்டத்தை முடித்து விட்டு சென்னை திரும்பிய முதலமைச்சர் மு க ஸ்டாலினை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் அமைச்சர் பொன்முடி சந்தித்து அமலாக்கத் துறை சோதனை தொடர்பாக ஆலோசனை நடத்தினார். அப்போது, சட்ட ரீதியாக மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.