“க்ளீன் சென்னை… 67341 சுவரொட்டிகள் அகற்றம்” : பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இதுவரை 67341 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

“க்ளீன் சென்னை… 67341 சுவரொட்டிகள் அகற்றம்” : பொது இடங்களில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை!

சென்னை மாநகரை துாய்மையாக பராமரிக்க சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திடக்கழிவுகள் அகற்றுதல், சாலை மைய தடுப்புகளில் செடிகள் நட்டு அழகுபடுத்துதல் உள்ளிட்ட பணிகள் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், பேருந்து நிழற்குடைகள், மாநகராட்சி கட்டடங்கள், பாலங்கள், தெரு பெயர் பலகைகள் உள்ளிட்ட பொது இடங்கள், சுவரொட்டிகளால் மாநகரின் அழகை சீர்க்குலைத்து வருகின்றன. இவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இதுவரை 67341 ஆயிரம் சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.குறிப்பாக, வடசென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 14899 சுவரொட்டிகளும், மத்திய சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 17216 சுவரொட்டிகளும், தென் சென்னை பகுதியில் உள்ள 5 மண்டலங்களில் 35226 சுவரொட்டிகளும் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் இன்று ஒரே நாளில் வடசென்னை பகுதியில் 693 சுவரொட்டிகளும், மத்திய சென்னையில் 923 சுவரொட்டிகளும், தென் சென்னையில் 527 சுவரொட்டிகள் என மொத்தம் 2213 சுவரொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இதே நிலை தொடருமானால், சுவரொட்டிகள் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருந்தால், அது குறித்து மாநகராட்சியின் 1913 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் எனவும், மாநகராட்சியின் முயற்சிக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.