பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி... சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டம்...

தமிழக பாஜக சார்பில் ஜனவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தமிழக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி... சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டம்...

ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  தமிழகம் வரும் பிரதமர் மோடி ஜனவரி 12-ஆம் தேதி விருதுநகர், ராமநாதபுரம், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், நாகை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க உள்ளார். 

இந்தநிலையில் ஜனவரி 12 ஆம் தேதி மதுரையில் பாஜக சார்பில் நடைபெறவுள்ள பொங்கல் பண்டிகையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தமிழக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டேலா நகரில் நடைபெறவுள்ள பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்துக் கொள்ள உள்ளதாகவும், இவ்விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆயிரம் பொங்கல் பானைகள், 100 நாதஸ்வர கலைஞர்கள், 50 ஜல்லிகட்டு காளைகளை கொண்டு பிரதமருக்கு வரவேற்பு அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் ஹெலிகாப்டர் மூலம் விருதுநகருக்கு சென்று 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு விழாவில் மோடி பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.