16ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை...

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி வருகிற 16ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

16ம் தேதி தமிழகம் உள்ளிட்ட 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை...

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்தாலும், அவை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என அண்மையில் மத்திய அரசு தெரிவித்தது. கடந்த சில நாட்களாக, ஓரிரு மாநிலங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில் சுட்டிக்காட்டியிருந்தது. இதனிடையே பல மாநிலங்கள் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்து வருவதால், தொற்று பரவும் அபாயமும் அதிகரித்துள்ளது. இது மூன்றாவது அலைக்கு வித்திடலாம் என்ற எச்சரிக்கையை நிபுணர்கள் முன்வைத்து வருகின்றனர். 

இந்த சூழலில்,  கொரோனா பரவல் தொடர்பாக  வடக்கிழக்கு மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நடைமுறை குறித்தும், தொலைதூர பகுதி மக்களும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளும் வகையில் வழிவகை செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி தொடர்பான அச்சத்தை விலக்கி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கொரோனா பரிசோதனையை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

கொரோனாவை முறையாக கையாண்டதாக பிரதமர் மோடிக்கு அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய 8 மாநிலங்கள் நன்றி தெரிவித்திருந்தன.

இந்தநிலையில் வருகிற 16ம் தேதி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மகராஷ்டிரா மற்றும் கேரளா ஆகிய 6 மாநில முதலமைச்சர்களுடன் பிரமதர் மோடி  கொரோனா தொடர்பான ஆலோசனை நடத்துவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டமானது வருகிற 16ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.