ஊடகங்களில் வெளியாகும் குறை தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை..... முதலமைச்சர் உத்தரவு!!!

ஊடகங்களில் வெளியாகும் குறை தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை..... முதலமைச்சர் உத்தரவு!!!

மக்களுக்கான கடமையை பொறுப்பை சரியாக செய்கிறோமா என்பதற்காகத்தான் கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் எனக் கூறியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விவசாயிகளுக்கு:

சேலத்தில் நடைபெற்ற கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  அதில், மக்களின் மனக்கலைகளை காகிதங்களாக பார்க்காமல் அவர்களின் வாழ்வாதாரமாக பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள முதலமைச்சர் வேளாண் திட்ட செயலாக்கங்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதுமே அரசின் இலக்கு எனக் கூறியுள்ளார்.

மக்களின் குறைகளை:

மேலும் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற முக்கியத்துவம் அளித்திட வேண்டும் எனவும் முக்கியமாக கிராமப்புற மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.  மக்களின் குறைகளை தீர்க்கவே முதல்வரின் முகவரி துறை உருவாக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த முதலமைச்சர் அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களிடம் அதிகாரிகள் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் எனவும்   மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

விரைவாக மக்களிடம்:

ஆதிதிராவிடர் உள்பட விளிம்பு நிலை மக்களுக்கான நடவடிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் ஊடகங்களில் வெளியாகும் குறை தொடர்பான செய்திகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.  வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் மக்களுக்கு உதவ ஆட்களை நியமிக்க வேண்டும் எனவும் காவல்நிலையத்தில் வரவேற்பு அலுவலர் இருப்பது பாராட்டுக்குரியது எனவும் கூறியுள்ளார்.  அரசு திட்டங்களை காலத்தே கொண்டு சேர்க்க செயலாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   பன்னீர் செல்வம் பூங்காவில் எடப்பாடி....!