பானிபூரியில் புழு- வடமாநில வியாபாரியை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்

சென்னை அம்பத்தூர் அருகே பானிபூரியில் புழு இருந்ததாக கூறி வடமாநில வியாபாரியை பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பானிபூரியில் புழு- வடமாநில வியாபாரியை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்

சென்னை அருகே உள்ள பட்டரைவாக்கம்  பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை தர இருந்தார்.  இதற்காக அந்த பகுதியில் ஏராளமான கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் கூடியிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வடமாநில வாலிபர் ஒருவர் தள்ளுவண்டியில் பானிபூரி கொண்டு சென்றுள்ளார். இதைப்பார்த்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களில் பலரும் அந்த பானபூரியை வாங்கி ருசிக்க தொடங்கியுள்ளனர்.

அப்போது அதில ஒருவரின் பானிபூரியி்ல் வைக்கப்பட்ட உருளைக்கிழங்கு  கெட்டுப்போய் துர்நாற்றத்துடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், வடமாநில வியாபாரி வைத்திருந்த உருளைக்கிழங்கை எடுத்து சோதனை செய்து பார்த்துள்ளனர்.

அப்போது அதில் புழு இருந்தது தெரியவந்தது. அந்த உருளைக்கிழங்கு வேக வைத்து பல நாட்கள் ஆகியிருந்ததும், அதை வாடிக்கையாளர்கள் கண்டுபிடித்து விடாமல் இருக்க உருளைக்கிழங்கை சூடாக்கி கொண்டு வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

 இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பானி பூரி விற்ற வடமாநிலத்தவரை பிடித்து இது குறித்து விசாரித்துள்ளனர். ஆனால் அவர் சமாளித்துவிட்டு அங்கிருந்து கம்பி நீட்டுவதிலேயே குறியாக இருந்துள்ளார். இதனால் அந்த வாலிபரை பிடித்த பொதுமக்கள் அவரை அருகில் இருந்த  கம்பியில் கட்டி வைத்து உதைத்தனர்.

மேலும் அவன் வைத்திருந்த உருளைக்கிழங்கு மற்றும் பானிபூரியை தரையில் கொட்டி யதுடன், அதை தயார் செய்யும் இடத்திற்கே அவரை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கு இருந்த பானபூரி தயார் செய்யும்  முதலாளி மற்றும் ஊழியர்கள் இருவரை பிடித்த பொதுமக்கள், அவர்களை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சென்னை முழுவதும் இதுபோல ஆயிரக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பானிபூரி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யும் இவர்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகளோ, அதிகாரிகளின் சோதனைகளோ, கெடுபிடிகளோ இல்லாமல் இருந்து வருகிறது.

இதனால் எந்த ஒரு பயமும் இன்றி இது போன்று மக்களின் உயிருடன் விளையாடும் செயலை இவர்கள் செய்து வருகின்றனர். இதனால் அதிகாரிகள் இதன்மீது தனிக்கவனம் செலுத்தி சுகாதாரத்துடன் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்து பொதுமக்களின் உயிரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பானிபூரியில் புழு இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.