"முன்னேறிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வேண்டும்" பம்மல் ராமகிருஷ்ணன்!!

முன்னேறிய வகுப்பில் பின்தங்கிய மக்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் முதலமைச்சர் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர்  வலியுறுத்தியுள்ளார். 

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் திருச்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்  மற்றும் கல்வி நிதி உதவி மற்றும் பல்வேறு துறைகளில் சேவை புரிந்துவருபவர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி பாராட்டும் நிகழ்வு என முப்பெரும் விழா திருச்சி ஸ்ரீரங்கத்தில் தனியார் மண்டபத்தில் மாநிலத் தலைவர் கோவை கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் சங்கர ராமநாதன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கல்வி உதவி வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த மாநில ஒருங்கிணைப்பாளர் பம்மல் ராமகிருஷ்ணன் கூறுகையில், "முன்னேறிய வகுப்பில் பின்தங்கிய மக்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்தில் முதல்வர் உடனடியாக அமல்படுத்த வேண்டும், ஸ்ரீரங்கம் ரயில் நிலைய விரிவாக்கத்தின் போது திருவானைக்கோவில் மக்களும் பயன்பெறும் வகையில் தனி நுழைவு வழி மற்றும் டிக்கெட் கவுண்டர்கள் ஏற்படுத்த வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பிராமண துவேஷ பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருபவர்களை அரசு தண்டிக்க வேண்டும் எனவும் ஸ்ரீரங்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 300 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் மக்களை வெளியேற்றச் சொல்லும் அறநிலையத்துறை, தமிழக அரசு அங்கு வசிக்கும் மக்களை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிக்க || சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்... முதலமைச்சர் அவசர ஆலோசனை!!