தமிழகத்தின் 26ஆவது ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என்.ரவி... ஆளுநருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கிய முதலமைச்சர்...

தமிழ்நாட்டின் 26ஆவது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

தமிழகத்தின் 26ஆவது ஆளுநராகப் பதவியேற்றார் ஆர்.என்.ரவி... ஆளுநருக்கு புத்தகங்களை பரிசாக வழங்கிய முதலமைச்சர்...

தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித், சமீபத்தில் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான, ரவீந்திர நாராயண ரவியை தமிழக ஆளுநராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்தார்.

பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோகித், சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் இருந்து விடைபெற்றுச் சென்றார். இதைத் தொடர்ந்து, புதிய ஆளுநரான ஆர்.என்.ரவி, நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தடைந்தார். அவரை  விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேரில் வரவேற்றார். 

இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி இன்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்பைத் தொடர்ந்து, ஆளுநருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களை பரிசாக வழங்கினார். பின்னர், சபாநாயகர், அமைச்சர்கள் உள்ளிட்டோரை ஆளுநருக்கு முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.

ஆளுநரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பேரவைத் தலைவர் அப்பாவு, துணைத் தலைவர் பிச்சாண்டி, துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி,  நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், பா.ஜ.க நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.