கோச்சார் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை

கோச்சார் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கோச்சார் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை

சென்னையில் டி.ஆர் பௌண்டேஷன் மற்றும் எஸ்டேட்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தவரான தன்ராஜ் கோச்சார் உட்பட அவரது உறவினர்களுக்குச் சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2006 ஆம் ஆண்டு தனது நிறுவனத்தின் பங்குதாரர்களான ஹமீத் மற்றும் அப்துல் ரவூபை ஏமாற்றி நிறுவன நிதியில் இருந்த பணத்தைக் கொண்டு தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பெயரில் தன்ராஜ் கோச்சார் சட்ட விரோதமாக 200 கோடி ரூபாய் மதிப்புடைய சுமார் 33 ஏக்கர் நிலம் வாங்கியதாக ஹமீத் என்பவர் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு நிலமோசடி தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தன்ராஜ் கோச்சார் உட்பட குடும்பத்தார் 7 பேருக்கு 6 வருட சிறை தண்டனையும், ஆளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தவிற நிலப் பத்திரங்களைப் பெற்றுக்கொண்டு வட்டிக்கு பணம் கொடுத்து பின் அந்த நிலங்களை அபகரித்துக் கொண்டதாகவும் தர்மராஜ் கோச்சார் மீது மத்தியக் குற்றப் பிரிவில் 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் மூலம் தன்ராஜ் கோச்சாரின் நிலமோசடி தொடர்பாகவும், சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் அமலாக்கத் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 அதனடிப்படையில் தன்ராஜ் கோச்சார், ரமேஷ் குமார் கோச்சார் உட்பட அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குச் சொந்தமான 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக வேப்பேரியில் உள்ள வீடு, எழும்பூரில் உள்ள அலுவலகம், என்.எஸ்.சி போஸ் சாலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகம் உள்பட 10 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. இந்த சோதனையின் மூலம் தன்ராஜ் கோச்சார் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை ஏதும் நடைபெற்றுள்ளதா? என்பது குறித்தும் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த் சோதனைகள் முடிவுக்கு வந்தபின் இந்த நடவடிக்கை தொடர்பான முழு விபரங்கள் வெளியிடப்படும் எனவும் அமலாக்கத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஈ.வி.கே சம்பத் சாலையில் உள்ள தன்ராஜ் கோச்சாருக்கு சொந்தமான வீட்டில் ஊழியர்கள் கதவைத் திறக்காததால் அமலாக்கத் துறையினர் நீண்ட நேரம் வீட்டு வாயிலில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் குடும்பத்தார் வரவழைக்கப்பட்டு அதிகாரிகள் வீட்டிற்குள் சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 5 மணியளவில் அமலாக்கத்துறையின் இந்த சோதனை துவங்கிய நிலையில் தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.