வடகிழக்குப் பருவ மழை தீவிரம்: குடியிருப்பு பகுதிகள், அரசு கட்டிடங்களை சூழ்ந்த மழைநீர்!

Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகள், அரசுக் கட்டிடங்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு குடியிருப்புகள், பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் இதர கட்டிடங்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.  

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட குடியிருப்புப் பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எஸ்.பி.அவென்யூ, அம்மன் நகர், ஜேம்ஸ் தெரு, சுமித்ரா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. சாலை தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கி இருப்பதால் அந்த பகுதியில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் மீது இருசக்கர வாகனங்களை பொதுமக்கள் ஓட்டி செல்லும் நிலை நிலவி வருகிறது. நகராட்சி நிர்வாகம் சார்பில் மழை நீரை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ஆலப்பாக்கம் எஸ் எஸ் எம் நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு மழை  நீரால் சூழ்ந்துள்ளது. இதனால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளியே வர முடியாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தேங்கியுள்ள நீரில் நினைந்தவாறே மாணவர்கள் பள்ளிக்கு சென்றனர்.

சென்னை ஐயப்பன் தாங்கல் பேருந்து பணிமனையில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் வைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்து உள்ளதால் தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com