பூர்விக சொத்துக்கள் குறித்து மறுபரிசீலனை செய்க....! ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டம்...!

பூர்விக சொத்துக்கள் குறித்து மறுபரிசீலனை செய்க....! ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் உண்ணாவிரத போராட்டம்...!

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முகுந்தராயபுரம் மற்றும் லாலாப்பேட்டை ஆகிய இரண்டு ஊராட்சிகளுக்கு இடையே பூர்வீக சொத்துக்கள்,  கோவில் நிர்வாகம் மற்றும் ஊராட்சியின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதன் காரணமாக பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இரண்டு ஊராட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு கோட்டாட்சியர் வினோத்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முடிவில் இரண்டு ஊராட்சிகளுக்கும் இடையே சுமுகமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

தற்பொழுது மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் இதனால் இரண்டு ஊராட்சிகளுக்கு இடையே பூர்வீக சொத்துக்கள் மற்றும் எல்லை பிரச்சனை காரணமாக கருத்து வேறுபாடு மற்றும் மோதல்கள் ஏற்படுவதாகவும்  கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த லாலாப்பேட்டை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் இளைஞர்கள் அனைத்து வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் ஒன்றிணைந்து முழு கடையடைப்பு போராட்டம் நடத்தினர். மேலும்  கருப்பு கொடியை வீடுகள் மற்றும் கடை வீதிகளில் ஏற்றினர்.  பின்னர் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே லாலாப்பேட்டை ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரதப்  போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து  இரண்டு ஊராட்சிகளின் பூர்வீக சொத்துக்கள் மற்றும் ஊராட்சியின் எல்லையை மறுவரையறை செய்வதில் காலதாமதம் ஏற்படுத்தி வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் முழுக்கமாக எழுப்பப்பட்டது.

இந்த போராட்டத்தின் முக்கிய நோக்கமாக 'லாலாப்பேட்டை ஊராட்சியின் பூர்வீக சொத்துக்கள் மற்றும் ஊராட்சியின் எல்லையை எவ்வித காலதாமதமும் இன்றி மாவட்ட நிர்வாகம் மறு வரையறை செய்து சுமூகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்'  எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வளர்மதி இடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, -
லாலாபேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஆகிய கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட எல்லை பிரச்சனைக்கு தொடக்கமாக அமைந்த காஞ்சனகிரி மலை கோவிலை நிர்வாகிக்கும் பொறுப்பை இந்து சமய அறநிலைத்துறை யிடம்  ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்து சமய அறநிலை துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும்  இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்  துறை ஆணையரை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசியபோது,   கோவிலை இந்து சமய அறநிலைத்துறை நிர்வகிக்கக் கோரி உள்ளதாக தெரிவித்தார்.  மேலும் லாலாபேட்டை மற்றும் முகுந்தராயபுரம் ஆகிய ஊராட்சிகளுக்கு இடையேயான  ஊராட்சி எல்லையை மறு வரையறை செய்ய தற்பொழுது திட்டம் ஏதும் இல்லை என்றும், இது தொடர்பாக போராட்ட ஒருங்கிணைப்பாளரிடம்  மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து,  தனிநபர் பிரச்சினைகள் காரணமாக இப்போராட்டம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பொது மக்களை தவறான வழியில் திசை திருப்புவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.