பரந்தூர் வந்த ஐ.ஐ.டி குழுவினர்...சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு!

பரந்தூரில், புதிய விமான நிலையம் அமைப்பதற்காக ஆய்வு செய்ய வந்த ஐ.ஐ.டி குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. இந்த விமான நிலையத்துக்காக சுமார் நான்காயிரத்து 500 ஏக்கர் நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

நிலம் கையகப்படுத்துதல் பணி மற்றும் விமான நிலையம் திட்டத்துக்கு 13 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக ஆய்வு செய்ய அரசு தரப்பில் அமைக்கப்பட்டுள்ள போராசிரியர் மச்ச நாதன் தலைமையிலான குழு இன்று ஆய்வு செய்ய வருவதாக தகவல் வெளியானது.

இதையும் படிக்க : நடிகர் சிவாஜி கணேசனின் 96-ஆவது பிறந்த நாள்...தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை!

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் அங்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பேராசிரியர் மச்சநாதன் தலைமையிலான ஐ.ஐ.டி குழுவினர் பரந்தூரில் விமான நிலைய திட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

ஐ.ஐ.டி குழுவினரின் இந்த ஆய்வின் போது, விமான நிலைய திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.