புழல் ஏரிக்குள் குவிக்கப்படும் கழிவுகள்.. திடக்கழிவு நீராக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!

ஆக்கிரமிப்பு கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் புழல் ஏரி மாசடைந்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

புழல் ஏரிக்குள் குவிக்கப்படும் கழிவுகள்.. திடக்கழிவு நீராக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!!

சென்னை - திருவள்ளூர் மாவட்டங்களின் முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரி 18 புள்ளி 21 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது.  

இந்நிலையில் சூரப்பட்டு, ஒரகடம், அம்பத்துார் உள்ளிட்ட பகுதிகளில் புழல் ஏரியையொட்டிய இடத்தில் தனியார் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.

குறிப்பாக சென்னை மற்றும் ஆவடி மாநகராட்சிகளை இணைக்கும் புழல் ஏரி நீர்பிடிப்பு பகுதியில் மட்டும் 200க்கும் மேற்பட்ட, ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இருப்பதாக, திருவள்ளூர் மாவட்ட நீர்வள துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இவ்வாறு ஏரியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களுக்கு வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் மின் வாரியம் மூலம் தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்களில் முறையான குப்பை அகற்றும் வசதி இல்லாததால், கழிவுகள் அனைத்தும் புழல் ஏரிக்குள் குவிக்கப்படுகின்றன. இதனால் புழல் ஏரியின் நீர் அடர்த்தியான திடக்கழிவுநீராக மாறி வருகிறது. புழல் ஏரியில் இருந்து பெறப்படும் குடிநீரை பயன்படுத்துவோர் பல்வேறு நோய் தொற்றுகளாலும், தோல் நோய்களாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் கொரட்டூர் ஏரியிலும், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதனையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிகளை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.