மகளிர் உரிமைத் தொகை குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம்...சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம்!

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் காரசார வாக்குவாதம் நடைபெற்றது. 

உரிமைத்தொகை மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார் பேசினார். அவர் பேசும்போது, வேறு சில காரணங்களுக்காக அதிமுகவின் எஞ்சிய உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், அவர் ஒருவராக நின்று வினாக்களை எழுப்பினார். அப்போது பேசிய அவர், மகளிர் உரிமைத்தொகை தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டினார். 

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு இப்போது வழங்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். மேலும், மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை 9 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக கூறிய முதலமைச்சர், நிச்சயம் தகுதியானவர்களுக்கு தொகை வழங்கப்படும் என்றார். 

உடனே பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்றுதான் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர் அப்பாவு, ஆர்.பி உதயக்குமாரின் மனைவிக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். 

அதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார், அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கலுக்கு பணம் கொடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். உடனே பதிலளித்த முதலமைச்சர், ஆண்டிற்கு ஒருமுறை தரப்படும் பொங்கல் தொகையையும், மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகையையும் ஒப்பிட்டுப் பேச வேண்டியதில்லை என்று தெரிவித்தார். 

மீண்டும் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆட்சிக்கு வந்து மகளிர் உரிமைத் தொகையை வழங்க இவ்வளவு கால தாமதம் ஏற்படுத்தியது ஏன் என்று கேள்வி எழுப்பினார். அதிமுக ஆட்சியால் விளைந்த நிதி நெருக்கடி தான் கால தாமதத்திற்கு காரணம் என்று முதலமைச்சர் குற்றஞ்சாட்டினார். 

முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவருடன் தனி ஆளாக அதிமுக எம்எல்ஏ ஆர்.பி.உதயகுமார், காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டது சட்டப்பேரவையை சிறிது நேரம் சலசலப்புக்கு உள்ளாக்கியது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com