மாண்டஸ் புயலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா...? பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் விளக்கம்

மாண்டஸ் புயலால் உயிரிழப்புகள் ஏற்பட்டதா...?  பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் விளக்கம்

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்றிரவு மாமல்லபுரம் அருகே இரவு புயல் கரையை கடந்தது. நள்ளிரவிற்கு பின் 2:30 மணிக்குள் புயலின் மைய பகுதி கடந்து சென்றது. 

பல இடங்களில் புயலின் காரணமாக மரம் விழுந்துள்ளது. இதுவரை 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இன்று மதியத்திற்குள் முழுமையான சேத விவரங்கள் தெரியவரும் என கூறினார்.  மேலும், உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை  எடுக்கப்பட்டதன் காரணமாக பெரிய அளவிலான சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் 205 நிவாரண மையங்களில் 9280 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவாசிய தேவைகள் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய உதவிகள் மற்றும் நிவாரணங்கள் ஒரிரு நாளில் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாண்டஸ் புயலின் பாதிப்பில் இருந்து மதியத்திற்குள் இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் புயல் வருகிறது என்று சொன்னாலும், மழை வருகிறது. மழை வந்தால் தான் நமக்கு குடிநீர் கிடைக்கும். இல்லையென்றால் அடுத்துவரும் காலங்களில்  குடிநீர் பிரச்சனை ஏற்படும். அடுத்ததாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் இதுவரை அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. அடுத்து மழை வந்தாலும், புயல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்க : மாண்டஸ் புயல் எதிரொலி...! பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்து சேதம்...!