வெளுத்து வாங்கிய கனமழையால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி...!

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

ஈரோடு மாநகரில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்தும் ஓடும் மழைநீரால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஈரோடு மாநகரில் விடிய விடிய தொடர் கனமழை பெய்தது. இந்நிலையில், இந்திரா நகர் பகுதியில், கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், மழை நீருடன் கழிவு நீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். மேலும், தீபாவளி விற்பனைக்காக கடை போட்டவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. ஜெயந்திபுரம், அவனியாபுரம், மாட்டுத்தாவணி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெளுத்து வாங்கிய மழையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

இதையும் படிக்க : அமைச்சர் எ.வ. வேலுக்கு தொடர்புடைய இடங்களில் 5-வது நாளாக தொடரும் ஐ.டி.,சோதனை!

கோவை மேட்டுப்பாளையத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஊட்டி மலை ரயில் பாதையில் கடந்த வாரம் பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டது. இந்நிலையில், பாதையை சரி செய்யும் பணி நடைபெறுவதால் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க போடப்பட்ட தடை நீடித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நீரின் அளவு குறையாததால், தடை மேலும் நீடித்துள்ளது.