மாமல்லபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கைத்தறி அருங்காட்சியகம்.. ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

மாமல்லபுரத்தில் 5 கோடி ரூபாயில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.

மாமல்லபுரத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கைத்தறி அருங்காட்சியகம்.. ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழ்நாட்டின் கைத்தறி இரகங்களின் பாரம்பரியம் மற்றும் கைத்திறனை பாதுகாக்கும் வகையில் 5 கோடி செலவில்  கைத்தறி அருங்காட்சியகம்  அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி அறிவித்திருந்தார்.

கைத்தறி நெசவில் ஆண்டாண்டு காலமாக உள்ள பாரம்பரியம் மற்றும் கலைநயத்தினை பாதுகாக்கவும்,வருங்கால புதிய தலைமுறையினர் நெசவுத் தொழிலின் மேன்மையை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுக்கும் வகையில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது.

கைத்தறி நெசவாளர்களின் திறன், தமிழ்நாட்டிலுள்ள கலைநயமிக்க கைத்தறி ரகங்களின் சிறப்பினை அறிந்து கொள்ளவும், கைத்தறி ரகங்களின் வடிவமைப்பு மற்றும் வண்ணங்களில் புதிய உத்தியினை பயன்படுத்தி உற்பத்தி மேற்கொள்ளவும் அருங்காட்சியகம் உதவும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி மாமல்லபுரத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கைத்தறி அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு தரப்பில் ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த கைத்தறி அருங்காட்சியகத்திற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் பணிகளை தொடங்குவதற்கான டெண்டர் அறிவிப்பை கைத்தறித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.