விநாயகர் சதுர்த்தியையொட்டி, களைகட்டும் சிலை விற்பனை- பூக்கள், பூஜை பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம்

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சந்தைகளில் மக்கள் பூஜைப் பொருட்கள் மற்றும் பூக்கள் வாங்க குவிந்தனர்.  

விநாயகர் சதுர்த்தியையொட்டி, களைகட்டும் சிலை விற்பனை- பூக்கள், பூஜை பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம்

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி திருநாளை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட தமிழக அரசு தடை விதித்துள்ளது. அத்துடன் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, சென்னையில் உள்ள முக்கிய சந்தைகளில் பூஜை பொருட்கள் வாங்க மக்கள் அதிகளவில் குவிந்தனர். பழங்கள், பூக்கள் விற்பனை செய்யப்படும் சந்தைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும் நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். 

இதையடுத்து, தென் தமிழகத்தில் மிகவும் முக்கியமாக சந்தையாக கருதப்படும் மதுரை மாட்டுத்தாவணியில் பூக்கள், பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மதுரை மாட்டுத் தாவணி பூ மார்க்கெட்டில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு பூக்கள் விற்பனையாகியது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், நெல்லை, வேலூர் மாவட்டத்திலும் பொதுமக்கள் விநாயகரை வழிபடுவதற்கு தேவையான பொருட்களை சந்தையில் வாங்கிச் சென்றனர். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில்தான் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பண்டிகையையொட்டி ஒரே இடத்தில் கூட்டமாக கூடுவதுடன் மாஸ்க் அணியாமலும் சுற்றி திரிந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.