சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி.....அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்.....

சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி.....அனுமதி மறுத்த உயர்நீதிமன்றம்.....

கடலூரில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்த இந்து மக்கள் கட்சிக்கு அனுமதி மறுத்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், மாநில மாநாடு மட்டும் நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

எழுச்சி பேரணி:

இந்து மக்கள் கட்சி சார்பில் ஜனவரி 28ஆம் தேதி கடலூரில் வள்ளலார் 200 வது பிறந்த தின நிகழ்ச்சியும், 29ஆம் தேதி காலையில் சனாதன இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்தவும், மாலையில் மாநில மாநாடு நடத்தவும் திட்டமிட்டு உள்ளது.

அனுமதி வேண்டி:

இந்த நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி காவல்துறையில் இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்ட தலைவரான ஆர்.எஸ்.தேவா என்பவர் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மனு அளித்துள்ளார்.  இதனை பரிசீலித்த காவல்துறை பேரணி மற்றும் மாநாடு நடத்த அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது.

மனு தாக்கல்:

காவல் துறை உத்தரவை ரத்து செய்து எழுச்சி பேரணி மற்றும் மாநில மாநாடு நடத்த அனுமதி கோரி ஆர்.எஸ்.தேவா உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

விசாரணை:

இந்த மனு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பேரணி நடத்த அனுமதி கோரும் ஆரிய வைசிய திருமண மண்டபத்தில் இருந்து மஞ்சக்குப்பம் திடல் வரையிலான சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்றும், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், அரசு மருத்துவமனை அமைந்திருப்பதாகவும், ஆம்புலன்ஸ்கள் அடிக்கடி சென்று வரும் பகுதி என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல் பிற மத வழிபாட்டுத்தலங்கள் உள்ளதால், பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பேரணி மற்றும் மாநில மாநாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி உத்தரவு:

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், இந்து மக்கள் கட்சி சார்பில் சனாதான இந்து தர்ம எழுச்சி பேரணி நடத்துவதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அதேசமயம், மாநில மாநாட்டை மட்டும் ஜனவரி 29ஆம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்திக் கொள்ள அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com