"காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாதது வேடிக்கை" சரத்குமார் பேச்சு!!

ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறும் மத்திய அரசால்  காவிரி பிரச்சனையை தீர்க்க முடியாதது வேடிக்கையாக உள்ளது என  சமத்துவ மக்கள் சட்சியின்  தலைவர் சரத்குமார் விமர்சித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், "காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் தலையீடு அவசியம். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விட மறுக்கிறது. தொடர்ந்து இருக்கும் காவேரி பிரச்சனையை மத்திய அரசு வலுவாக இருந்து அதை தீர்க்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என கூறும் நேரத்தில் ஒரே நாட்டிற்குள் இருக்கும் பிரச்சனையை தீர்க்க முடியாதது வேடிக்கையாக உள்ளது. காவேரி விவகாரத்தில் மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும்" எனப் பேசியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலில் என்ன நிலைப்பாடு எடுப்பது என்பது குறித்து வரும் டிசம்பர் 9 ஆம் தேதி நெல்லையில் நடைபெறும் கட்சியின் கூட்டத்திற்கு பின் முடிவெடுப்போம் எனக் கூறிய அவர், 2026 ஆம் சட்டமன்ற தேர்தலை நோக்கி செயல்படுவது தான் சிறந்தது என்பது தனது கருத்து எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், காவேரி விவகாரத்தில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டு மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் சூழல் ஏற்பட்டால், தமிழ்நாடு நடிகர்களும் போராடுவார்கள் எனக் கூறிய அவர் காவேரி பிரச்சனையை சரி செய்ய வேண்டியது அரசு தான் எனவும் கூறியுள்ளார்.