தூத்துக்குடி மாநகராட்சியின் 20வது ஆணையாளராக சாருஸ்ரீ பதவி ஏற்றுக்கொண்டார்

தூத்துக்குடி மக்களின் தேவையறிந்து அவர்கள் குறைகளை போக்குகின்ற வழியில் செயல்படுவேன் என தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட சாருஸ்ரீ தெரிவித்தார்.

தூத்துக்குடி மாநகராட்சியின் 20வது ஆணையாளராக சாருஸ்ரீ பதவி ஏற்றுக்கொண்டார்
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக இருந்த சரண்யா அரி மாற்றப்பட்டு அன்மையில் சாருஸ்ரீ ஐ.ஏ.ஏஸ் அவர்களை தமிழக அரசு தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையாளராக அறிவித்தது.
 
இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் வந்த அவரை மாநகராட்சி அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் அவர் இன்று தூத்துக்குடி மாநகராட்சியின் 20ஆவது ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், தூத்துக்குடியில் கொரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்றபோதிலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது முககவசம் அணிவது போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும், மக்களுக்கு மருத்துவ ரீதியாக தேவைப்படும் உதவிகளை மாநகராட்சி நிச்சயம் செய்யும். அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாநகராட்சியில் அதிகமான நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
 
மேலும், தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணி, கொரோனா தடுப்புப் பணி, நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்திலும் கவனம் செலுத்தப்படும். மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது ஒரு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மழை வருவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன அதற்கு முன்பாக மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 
 
இவர் 2015ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ்  அதிகாரியாக தேர்வானவர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உதவி ஆட்சியராக பணியாற்றிய அவர் தொடர்ந்து சென்னை வணிகவரித் துறையில் அதிக வரி செலுத்துவோர் பிரிவில் இணை ஆணையராக பதவி வகித்தார். அதனை தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாநகராட்சியின் 20ஆவது ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.