கண்ணாடியே இல்லாமல் மாணவ, மாணவியருடன் தனியார் பள்ளி பேருந்து இயக்கம்!

பல்லடம் அருகே பின்புற கண்ணாடிகள் இல்லாமல் தடுப்பு வைத்து மறைக்கப்பட்ட நிலையில் மாணவ, மாணவியருடன் தனியார் பள்ளி பேருந்து இயக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி  உள்ளது.

கண்ணாடியே இல்லாமல் மாணவ, மாணவியருடன் தனியார் பள்ளி பேருந்து இயக்கம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த நீலாம்பூர் பகுதியில் ஜிஆர்டி சிபிஎப் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது.  இந்த பள்ளிக்கு சொந்தமான பேருந்து ஒன்று  மாணவ மாணவியர்களுடன்  இன்று  மாலை சென்று கொண்டிருந்தது.

அந்த பேருந்தின் பின்புறம் இரு கண்ணாடிகளும் இல்லாத நிலையில் தடுப்பு வைத்து மறைக்கப்பட்ட நிலையில்  சோமனூர், ராசி கவுண்டன்புதூர், முத்து கவுண்டன் புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவியரை இறக்கி விடுவதற்காக சென்றதாக தெரிகிறது.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த காரில் பயணித்த ஒருவர், பேருந்தின் இந்த அவல நிலையை  வீடியோவாக எடுத்து  வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தார்.  இந்த வீடியோ தற்போது வைரலாகி பொதுமக்கள் மற்றும் பெற்றோரிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து நமது செய்தியாளர் பள்ளி நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது இன்னும் ஒரு வார காலத்தில் கண்ணாடி பொருத்தப்படும் என்று பொறுப்பற்ற முறையில் கூறியுள்ளார்.

இப்படி தகுதியற்ற நிலையில் இருக்கும் இந்த பேருந்தை இயக்கி வரும் தனியார் பள்ளி நிர்வாகத்திற்கு  சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பின்புறத்தில் கண்ணாடி இல்லாததால் மாணவ மாணவிகள் கீழே தவிறி விழும் ஆபத்து இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

எனவே கோவை மாவட்ட அரசு நிர்வாகமும், போக்குவரத்து துறையினரும் ஆபத்தான நிலையில் மாணவர்களை அழைத்துச் சென்று வரும் பள்ளி பேருந்தை தடை செய்து பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்,பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் கோரிக்கையாக உள்ளது.