கல்வியை கட்டணம் இன்றி தொடர தமிழக அரசு நடவடிக்கை..!

கல்வியை கட்டணம் இன்றி தொடர தமிழக அரசு நடவடிக்கை..!

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பள்ளி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

பெற்றோரை இழந்து தனித்து வாடும் குழந்தைகள்:

உலகம் முழுவதும் கொரோனா பிடியில் சிக்கி தவித்து வந்தனர். அதில் இந்தியா மட்டும் விதிவிலக்கல்ல...இந்தியாவிலும் தன் கோர தாண்டவத்தை நிகழ்த்தி சென்றது கொரோனா வைரஸ். இதன் பிடியில் பல்வேறு குழந்தைகளின் பெற்றோர் சிக்கி தங்கள் உயிரை விட்டனர் . இதனால் பல்வேறு குழந்தைகள் தங்களது பெற்றோரை இழந்து  தனித்து வாடினர். அவர்களுக்கெல்லாம் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைககளை வழங்கி வருகின்றன. தொடர்ந்து, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குழந்தைகளை, தமிழ்நாடு அரசு காப்பகங்களில் தங்கவைத்து, அவர்களுக்கான கல்வி செலவுகளை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். 

கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு:

இந்தநிலையில், கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்து, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, கல்விக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை, அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் பெறுவதில் இருந்து விலக்களித்து, அவர்கள் தொடர்ந்து அதே பள்ளிகளில் படிப்பதை உறுதி செய்திட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து பள்ளிகளும் கருத்துரு அனுப்பியதை உறுதி செய்ய வேண்டும்:

மேலும் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டிற்கான கல்வி கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பான கருத்துருவை, தனியார் பள்ளி கட்டண நிர்ணய குழுவிற்கு அனுப்பி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து பள்ளிகளும் கருத்துரு அனுப்பியதை உறுதி செய்யவும், தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.