ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள்...!!

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பஸ்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதால் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தை உணராமல் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்கள்...!!

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் சமீபகாலமாக பஸ் பயணம் என்பது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சாகச பயணமாக மாறியுள்ளது. 2 பேருக்கு மேல் நிற்க முடியாத பஸ் படிக்கட்டில் ஒரே நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முண்டியடித்து கொண்டு ஏறி படிகட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்கின்றனர்.

புத்தக பைகளையும் முதுகில் சுமந்து கொண்டு செல்லும் இத்தகைய மாணவர்களின் பயணம் என்பது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் தான் உள்ளது.  அதேபோல் நேற்று முன்தினம் சங்கராபுரத்தில் இருந்து புதுப்பாலப்பட்டுக்கு செல்லும் அரசு பேருந்தின் படிக்கட்டில் கல்லூரி மாணவர்கள் உள்பட ஏராளமானோர் தொங்கி கொண்டு சென்றுள்ளனர்.  

சங்கராபுரத்தில் தினம், தினம் காலை, மாலை நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கி செல்வதற்கு பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதே காரணமாகும் என கூறப்படுகிறது.

ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்படுவதால் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்பதாலும், அந்த பஸ்சை தவறவிட்டால் அடுத்த பஸ் வருவதற்குள் தாமதமாகி விடும் என்பதாலும் படிக்கட்டில் தொங்கி கொண்டாவது சென்றுவிடலாம் என மாணவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இதுபோன்ற படிக்கட்டு பயணத்தில் நிறைந்து இருக்கும் ஆபத்தை அவர்கள் உணர தவறிவிடுகிறார்கள் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.