இன்னும் 100 சவரன் நகைக்கூட வாங்கி வருகிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள்... பூட்டிய வீட்டின் முன் கதறிய பெண்...

வரதட்சணை கொடுமையால் தள்ளி வைத்த கணவனிடம், தன்னை ஏற்றுக் கொள்ளும்படி மன்றாடிய பெண்.

இன்னும் 100 சவரன் நகைக்கூட வாங்கி வருகிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள்... பூட்டிய வீட்டின் முன் கதறிய பெண்...
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே திருத்துவபுரத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ். மொழிப்போர் தியாகியான இவரின் மகள் வழக்கறிஞர் ஷீலா பிரியதர்ஷினிக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் ராஜஷெரினுக்கும் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடந்திருக்கிறது. இவர் அரசு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசியராகப் பணியாற்றி வருகிறார்.  திருமணத்தின்போது 101 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசை அறுபதுநாள், மோகம் முப்பது நாள் என்பது போல திருமணமான புதிதில் ராஜாஷெரின் மனைவியிடம் பாசமாகவும் அன்புடனும் இருந்துள்ளார். நாளடைவில் ராஜாஷெரினுக்கு பெண்களுடன் தவறான தொடர்புகள் ஏற்பட்டதால் மனைவியிடமிருந்து ஒதுக்கி இருந்துள்ளார்.  பெண்கள் தொடர்பினால் பணத்தை இழந்தவர், கடன் சுமையை சமாளிக்க முடியாமல் திணறினார். இந்நிலையில் அவரும், அவருடைய குடும்பத்தினரும் சேர்ந்து பிரியதர்ஷினியிடம் மேலும் 100 சவரன் நகை மற்றும் சொத்துக்களை எழுதி வாங்கி வரச்சொல்லி பல வகைகளில் தொல்லை கொடுத்துள்ளனர். 
 
ஏற்கனவே மனைவிமீது பாராமுகமாக இருந்தவர், குடும்பத்தினர் மனைவிக்கு கொடுத்த தொல்லைகள் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். கொடுமைகள் அதிகரிக்கவே தாங்க முடியாத பிரியதர்ஷினி மார்த்தாண்டம் போலீசில் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, கோணம் அருகே தனி வீடு எடுத்து ராஜாஷெரினும், பிரியதர்ஷினியும் தனிக்குடித்தனம் நடத்திவந்த நிலையில், சென்னையில் தனக்கு அதிக ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளதாகவும், நான் முதலில் போகிறேன், பிறகு வந்து உன்னை அழைத்துச் செல்கிறேன் என பிரியதர்ஷினியிடம் கூறிவிட்டு சென்ற ராஜஷெரின் அதன்பிறகு வீட்டுப்பக்கமே வரவில்லை. போன் மூலம் தொடர்புகொள்ள முடியாத நிலையில்,  சமைத்து சாப்பிடக்கூடிய அடிப்படை வசதிகள்கூட இல்லாத வீட்டில் பிரியதர்ஷினி சாப்பாடு கூட சரியாக இல்லாமல் தனியாக தவித்து வந்துள்ளார்.
 
இதற்கிடையே வியாழக்கிழமை அன்று இரவு வீட்டுக்கு வந்த ராஜஷெரின், சில மணி ரேநத்திலேயே புறப்பட்டு சென்றுவிட்டார் கணவனை தேடி அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்த பிரியதர்ஷினி அங்கிருந்த கணவரிடம் நியாயம் கேட்டுள்ளார். அவரின் நியாயத்தை காதில் வாங்காத ராஜஷெரின் மற்றும் அவரது குடும்பத்தினர் பிரியதர்ஷினியை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டனர். என்னசெய்வது என்று புரியாமல் திகைத்த பிரியதர்ஷினி, வீட்டுக்கு முன் நின்று கதறி, கதறி அழுதார். உங்கள் மீது உள்ள பாசத்தினால் உங்கள் குடும்பத்தினர் செய்த கொடுமை எல்லாம் பொறுத்துக் கொண்டேனே, இன்னும் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கி வருகிறேன், என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கதறி அழுதார்.

என் கணவருடன் வாழ வையுங்கள் என்று நடுரோட்டில் புரண்டு அழுத பிரியதர்ஷினியை பார்த்தவர்கள் கண்கலங்கினர். இவ்வளவு போராட்டத்திற்கும் கூட அந்த வீட்டிலிருந்து யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. சம்பவம் பற்றி கேள்விப்பட்ட போலீசார் விரைந்து வந்து பிரியதர்ஷினியை சமாதானப்படுத்தி விசாரித்து வருகின்றன. இதற்கிடையில், வீட்டுக்குள் இருந்த ராஜஷெரின் பின் வாசல் வழியாக தப்பியோடிவிட்டதாக தெரிகிறது. அவரை கண்டுபிடித்து விசாரணை நடத்தி பிரியதர்ஷினிக்கு நியாயம் கிடைக்கச் செய்யப்படும் என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.